முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Sunday, August 26, 2012

தமிழ்மொழி - இலக்கணம்


 
      செந்தமிழர் போற்றும் பைந்தமிழில் வாக்கிய அமைப்பு என்பது மிகவும் நுட்பமானதாகும். தமிழ் மொழியினைப் பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். கருத்துள்ள வாக்கியம் ஒன்றனை அமைப்பதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானதாய் அமைகின்றது.

      சொற்கள் சில ஒன்று சேர்ந்து பொருள் தருமாயின் அதைச் சொற்றொடர் என்கிறோம். நிறுத்தற்குறிகள் சரியாக அமைந்திருப்பின் அச்சொற்றொடரை வாக்கியம் என்கிறோம். ஒரு வாக்கியம் அடிப்படையில் எழுவாய், பயனிலை உறுப்புக்களை கொண்டிருக்கும். இவற்றுடன் செயப்படுபொருள் என்ற மற்றுமோர் உறுப்பும் வாக்கியத்தில் இணைந்து வாக்கியத்தின் முக்கிய உறுப்புக்களை மூன்று வகையாக பிரிக்க வழிவகுத்துள்ளது. ஒரு வாக்கியத்தைப் பொறுத்தவரை அது தோன்றுவதற்கும் அவ்வாக்கியத்தில் நடைபெறும் செயலைச் செய்பவரைக் காட்டுவதற்கும் எழுவாய் முக்கியமானது.

      அமுதன் மரத்தை வெட்டினான் என்ற வாக்கியத்தில் வெட்டுதல் என்ற செயற்பாட்டினை செய்யும் அமுதன் என்ற பெயர்ச்சொல்லினை எழுவாயாகக் குறிப்பிடுகிறோம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விடையம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெயர்ச்சொற்களே எழுவாயாக வருவதுண்டு. சிலவேளைகளில் மிகவும் அரிதாக நிகழ்கால வினையெச்சங்களும் எழுவாயாக வருகின்றன. அத்தோடு சில வாக்கியங்களில் பல எழுவாய்கள் காணப்படலாம். இவ்வாக்கியத்தின் பயனிலை பன்மையில் முடிவடைவதனை நீங்கள் காணலாம். 

      அடுத்ததாக பயனிலை பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் எழுவாய் செய்கின்ற தொழிலைக் குறித்து நிற்பது பயனிலை எனப்படும். ஒரு வாக்கியத்தைப் பொருளுடையதாக முடித்துவைப்பதும் பயனிலையே. உதாரணமாகக் அமுதன் படித்தான் என்ற வாக்கியத்தில் அமுதன் என்ற எழுவாயின் படித்தல் என்ற தொழிலினைக் காட்டி வந்த படித்தான்என்பதே பயனிலை. பயனிலை காலம் காட்டும். 

      ஒரு வாக்கியத்தில் எழுவாய் ஒரு செயலைச் செய்கின்றது. எழுவாய் செய்கின்ற செயலைப் பயனிலை காட்டி நிற்கிறது. எனவே செயலினைச் செய்தவர் எழுவாயாகவும் செயல் பயனிலையாகவும் இருக்கின்ற போது அச்செயல் எதன்மீது செய்யப்பட்டது? அல்லது அச்செயலினை ஏற்கும் பொருள் எதுவோ அதுவே செயப்படுபொருள் எனப்படும்.

      உதாரணமாக வேந்தன் மரத்தை வெட்டினான் என்ற வாக்கியத்தில் யார் வெட்டினான்? என்ற வினாவுக்கான விடை எழுவாய். வேந்தன் என்ன செய்தான்? என்ற வினாவிற்கான விடை பயனிலை. வேந்தன் எதை வெட்டினான்? என்ற  வினாவிற்கான விடை செயப்படுபொருள் எனக் கொள்க. எனவே செயப்படுபொருள் என்பது பயனிலைக்கு முன்னால் எதை? யாரை? எவற்றை? போன்ற வினாக்களை இட்டு கேட்கப்படும் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடையாகும். 

      பல சந்தர்ப்பங்களில் செயப்படுபொருள் வெளிப்படாமலும் கருத்துள்ள வாக்கியங்கள் அமைந்துவிடுவதுண்டு. செயப்படுபொருள் தெளிவாகவோ அல்லது மறைந்திருக்குமாயின் அவ்வாக்கியத்தைச் செயப்படுபொருள் குன்றாவினை வாக்கியம் என்று அழைக்கப்படும். செயப்படுபொருள் இல்லாமல் அமையும் வாக்கியத்தினைச் செயப்படுபொருள் குன்றியவினை வாக்கியம் என்கிறோம்.

                                            தமிழாசிரியர் திரு ந.தமிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி.

தமிழ்மொழி - கருத்துணர்தல்


தமிழ்மொழி படிவம் 4-5
கருத்துணர்தல்

கேள்விகள் 1 - 5
கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைப் பகுதியை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

காலை 7.00 மணிக்கே பள்ளிக்குச் சென்று விட்டேன். மாணவர்கள் பரபரப்பாக ஏற்பாட்டுப் பணிகளில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வராசு, எனக்கு முன்பே வந்து பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். தன் பேச்சுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். எல்லா ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகச் செய்து கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்ததும் என் மனம் லேசாய் இளகிப் போனது. எண்ணிப் பார்க்க முடியாத மாணவர்கள் கூட வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதைப் பார்த்த போது, துலக்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தால், இவர்களை எங்கோ தூக்கி வைத்து விடலாம் என்பது மட்டும் புரிந்தது.

நேரம் 9.30ஐ நெருங்க-நெருங்க பெற்றோர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஆனால், மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடவே செய்தது. கூட்டம் இந்நேரம் பாதியாவது நிறைந்திருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. நேரம் செல்ல - செல்ல ஒரு போராட்டமே உருவாகத் தொடங்கி இருந்தது. பத்து மணிக்கு நிகழ்வைத் தொடங்கலாம் என்றிருந்த எங்களுக்கு, அதுவரை 30 பேர் கூட வந்திராதது அடிவயிற்றையே கலக்க ஆரம்பித்தது. நான் செல்வராசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன். எந்தக் கலவரமும் இல்லாமல் அப்போதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டுதான் இருந்தார்.

மணி 10.30ஐ நெருங்கியது. எழுநூறு பேரை எதிர்பார்த்த இடத்தில் வெறும் அறுபத்திரண்டு பேர் மட்டும் வந்திருந்தனர். இனியும் வருவார்கள் என்ற நம்பிக்கை கரைந்து போயிருந்த நிலையில்,

"சார்! இருக்கிறவங்கள வெச்சி ஆரம்பிப்போம். இனி வருகிறவங்க வரட்டும். நாம் காத்திருக்க வேண்டாம்." என்று செல்வராசு தோளைப்பற்றிக் கொண்டு சொன்னபோது, உள்ளம் முழுமையாய் ஒடிந்து விழுந்தது. "சரி" என்றேன். வந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நிகழ்வு தொடங்கியது.

வந்திருந்தோரை நோட்டம் இடுகிறேன். எந்தச் சிக்கலையும் தராத மாணவர்களின் பெற்றோர்கள் தான் நிறைந்திருந்தனர். யாரை எதிர்ப்பார்த்தோமோ அவர்கள் வராதது, உள்ளத்தைக் கலக்கவே செய்தது. எதுவோ இனம் புரியாத ஒன்று உணர்வைக் குடையத் தொடங்கியது.

"...இங்க பாருங்க சார், இந்தச் சமுதாயம் முழுவதுமா புரையோடிப் போன சமுதாயம். இதற்கு மருந்து போட்டு மருத்துவம் பார்க்க நினைப்பது நாய குளிப்பாட்டி நடுவீட்டில வைக்கிற மாதிரி. பேசாம உருப்படியான வேலையைப் பாருங்க....," என்று நக்கலாகச் சொன்ன சங்கரன் ஆசிரியரின் கூற்று கூட உண்மைதானோ? எல்லா முயற்சியும் அவர் சொன்னதைப் போல வீண் தானோ? உள்ளம் உண்மையிலேயே தடுமாறத் தொடங்கியது. காலியான நாற்காலிகள் எல்லாம் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதைப் போன்றிருந்தது.

நிகழ்ச்சிக்குப் பெற்றோரின் வருகை தவிர எல்லாமும் சிறப்பாகவே நடந்து முடிந்தது. ஆனால், உள்ளத்தின் தெம்பெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டதை உண்மையாக உணர முடிந்தது.

                  பேரவைக் கதைகள் - நீரோடை (மு. தமிழரசு)


1.     18வது வரியில் "நம்பிக்கை கரைந்து போயிருந்த நிலையிலும்" எனும் தொடர் எதைக் குறிக்கின்றது?                                  [2 புள்ளிகள்]
   ______________________________________________________________________
   ______________________________________________________________________
   ______________________________________________________________________

2.     எத்தகைய பெற்றோர்களுக்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது?
                                                    [2 புள்ளிகள்]
   ______________________________________________________________________
   ______________________________________________________________________
   ______________________________________________________________________

3.     "இந்தச் சமுதாயம் முழுவதுமா புரையோடிப் போன சமுதாயம்" எனும் தொடர் எதனைக் குறிக்கிறது?                                   [4 புள்ளிகள் ]
_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________

4.     ஆசிரியர் செல்வராசு  எத்தகைய எண்ணம் கொண்டவர்?           
                                                   [ 2 புள்ளிகள் ]
   _____________________________________________________________________
   _____________________________________________________________________

5.     மாணவர்கள் நலன் கருதி நடத்தப்படும் நிகழ்வுகளுக்குப் பெற்றோர்கள் ஆர்வம்      காட்டாமல் இருப்பதற்கான காரணங்கள் யாவை?         [ 4 புள்ளிகள் ]
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
     

                      தயாரிப்பு: தமிழாசிரியர் திரு. .தமிழ்வாணன்
                               ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி

Thursday, August 23, 2012

கொடைநெஞ்சர் ,தன்முனைப்புப் பேச்சாளர், முனைவர் ஆதிசேஷன் அவர்களுக்கு நன்றி மலர்கள் சமர்ப்பணம்!


நமது மன்றத்தின் வெளியீடான ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி அவர்கள் எழுதிய 'SPM தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல்' அண்மையில் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடந்த SPM தமிழ் இலக்கிய கருத்தரங்கில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது. ஜோகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரி , தமிழ் மொழித்துணை இயக்குநர் திரு. இரா. விஜயன் அவர்கள் முன்னிலை வகிக்க, கொடை நெஞ்சர், நாடறிந்த தன்முனைப்புப் பேச்சாளர் முனைவர் திரு. ஆதிசேஷன் அவர்கள் இந்நூலை வெளியீடு செய்தார்கள். இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கான முழுச்செலவையும் ஏற்றுக்கொண்ட அன்னார் அவர்களின் அறப்பணிக்கும் நல்லெண்ணத்திற்கும் மன்றம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் சிறப்பான முறையில் வெளியீடு காண அரும்பாடு பட்ட ஜோகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரி , தமிழ் மொழித்துணை இயக்குநர் திரு. இரா. விஜயன், தாமான் யூனிவர்சிடி இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. சு. ரவிச்சந்திரன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. கு. பூபதி குப்புசாமி, கூலாய் சுல்தான் அப்துல் ஜாலில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்மணி திரு. மு.மதியழகன், ஜோகூர் மாநில மாவட்டப் பாடக்குழுத் தலைவர்கள், ஜோகூர் மாநில இலக்கியப்பாட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றம் தனது நன்றி மலர்களைச் சமர்ப்பணம் செய்கின்றது.

Wednesday, August 15, 2012

வணக்கம்.
வாழ்க வளமுடன்.
அடியேனின்  இணயக் கட்டுரைகளின் தொகுப்பான வாசிப்புப் பேழையை கீழ்க்கண்ட இணைப்பில் பெறலாம்.

http://www.ziddu.com/download/20128513/VAASIPPUPPEEZAI_.pdf.html

அடியேனின் ஜொகூர் மாநில பி.எம்.ஆர். கேள்வித்தாள் முன்னோட்டத் தேர்வுத் தாள் தொகுப்பு 2005-2012  கீழ்க்கண்ட இணைப்பில் பெறலாம்.

http://www.ziddu.com/download/20128580/KOLEKSIKERTASSOALANPMRPERCJOHOR2005-2012.pdf.html

பிறருடனும் பகிர்ந்து கொள்க.
நன்றி.
ந.தமிழ்வாணன்
ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி.

Monday, May 21, 2012

படிவம் ஒன்றுக்கான பள்ளி அளவிலான மதிப்பீடு

வணக்கம்.
படிவம் ஒன்றுக்கான பள்ளி அளவிலான மதிப்பீட்டுக் கருவிகள் தேவைப்படும் ஆசிரியப் பெருந்தகைகள் அடியேன் மின்னஞல் முகவரிக்குத் தங்களின் மின்னஞ்சல் முகவரியைத்தெரியப்படுத்தினால் என்னிடம் உள்ள ஆவணங்களையும் பிறவற்றையும் இலவயமாக அனுப்பிவைப்பேன். மேலும் நடந்துமுடிந்த அரையாண்டுத்தேர்வுத்தாள் தொகுப்புகளும் இலவயமாகவே அனுப்பிவைக்கப்படும். தேவைப்படுவோர் தொடர்புகொள்க. அடியேனது மின்னஞ்சல் thamilvanan@yahoo.com


நிழற்படத்தில் தேர்வுவாரிய அதிகாரி திரு சந்திரகுரு அவர்களுடன்.. (முழுப்படத்தையும் காண நிழற்படத்தின்  மீது  சொடுக்கவும்)


Saturday, August 7, 2010

பி.எம்.ஆர். முன்னோட்டத் தேர்வுத் தொகுப்பு 2005-2009 (ஜோகூர்)

அன்புக்குரிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு,
நமது ஜோகூர் மாநிலத்தின் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பெற்ற பி.எம்.ஆர். முன்னோட்டத் தேர்வுத் தாட்களின் தொகுப்பு அடியேனால் தொகுக்கப்பட்டுள்ளது (KOLEKSI KERTAS SOALAN PEPERIKSAAN PERCUBAAN PMR NEGERI JOHOR 2005-2009). PDF அமைப்பில் உள்ள இத்தொகுப்பினைப் (இலவசம்) பெறவிரும்பும் ஆசிரியர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியினை thamilvanan@yahoo.com எனும் எனது முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (நாடு முழுவது உள்ள ஆசிரியப் பெருந்த்தகைகளும் தொடர்பு கொள்ளவும்.)
நன்றி.

PMR தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு

வணக்கம்.
இவ்வாண்டின் பி.எம்.ஆர். தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு கீழ்க்கண்ட விவரப்படி நடைபெரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாள் : 29.08.2010 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
இடம் : DK8, N24, UTM, SKUDAI
கட்டணம் : RM30.00 மட்டும்
தொடர்புக்கு : திரு. ந.தமிழ்வாணன் 012-7116058
திரு. கு. பூபதி 012-7727841
திரு. ப. சரவணன் 012 7347953
திரு. சு. இரவிச்சந்திரன் 013 7689379

ஜோகூர் பாரு, பாசீர் கூடாங்கு, கூலாய் மாவட்ட அன்புக்குரிய ஆசிரியப் பெருமக்கள் இந்நற்செய்தியை மாணவர்களுக்குத் தெரிவித்து, அவர்களை இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துமாறு வேண்டுகிறோம்.