முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Sunday, August 26, 2012

தமிழ்மொழி - இலக்கணம்


 
      செந்தமிழர் போற்றும் பைந்தமிழில் வாக்கிய அமைப்பு என்பது மிகவும் நுட்பமானதாகும். தமிழ் மொழியினைப் பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். கருத்துள்ள வாக்கியம் ஒன்றனை அமைப்பதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானதாய் அமைகின்றது.

      சொற்கள் சில ஒன்று சேர்ந்து பொருள் தருமாயின் அதைச் சொற்றொடர் என்கிறோம். நிறுத்தற்குறிகள் சரியாக அமைந்திருப்பின் அச்சொற்றொடரை வாக்கியம் என்கிறோம். ஒரு வாக்கியம் அடிப்படையில் எழுவாய், பயனிலை உறுப்புக்களை கொண்டிருக்கும். இவற்றுடன் செயப்படுபொருள் என்ற மற்றுமோர் உறுப்பும் வாக்கியத்தில் இணைந்து வாக்கியத்தின் முக்கிய உறுப்புக்களை மூன்று வகையாக பிரிக்க வழிவகுத்துள்ளது. ஒரு வாக்கியத்தைப் பொறுத்தவரை அது தோன்றுவதற்கும் அவ்வாக்கியத்தில் நடைபெறும் செயலைச் செய்பவரைக் காட்டுவதற்கும் எழுவாய் முக்கியமானது.

      அமுதன் மரத்தை வெட்டினான் என்ற வாக்கியத்தில் வெட்டுதல் என்ற செயற்பாட்டினை செய்யும் அமுதன் என்ற பெயர்ச்சொல்லினை எழுவாயாகக் குறிப்பிடுகிறோம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விடையம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெயர்ச்சொற்களே எழுவாயாக வருவதுண்டு. சிலவேளைகளில் மிகவும் அரிதாக நிகழ்கால வினையெச்சங்களும் எழுவாயாக வருகின்றன. அத்தோடு சில வாக்கியங்களில் பல எழுவாய்கள் காணப்படலாம். இவ்வாக்கியத்தின் பயனிலை பன்மையில் முடிவடைவதனை நீங்கள் காணலாம். 

      அடுத்ததாக பயனிலை பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் எழுவாய் செய்கின்ற தொழிலைக் குறித்து நிற்பது பயனிலை எனப்படும். ஒரு வாக்கியத்தைப் பொருளுடையதாக முடித்துவைப்பதும் பயனிலையே. உதாரணமாகக் அமுதன் படித்தான் என்ற வாக்கியத்தில் அமுதன் என்ற எழுவாயின் படித்தல் என்ற தொழிலினைக் காட்டி வந்த படித்தான்என்பதே பயனிலை. பயனிலை காலம் காட்டும். 

      ஒரு வாக்கியத்தில் எழுவாய் ஒரு செயலைச் செய்கின்றது. எழுவாய் செய்கின்ற செயலைப் பயனிலை காட்டி நிற்கிறது. எனவே செயலினைச் செய்தவர் எழுவாயாகவும் செயல் பயனிலையாகவும் இருக்கின்ற போது அச்செயல் எதன்மீது செய்யப்பட்டது? அல்லது அச்செயலினை ஏற்கும் பொருள் எதுவோ அதுவே செயப்படுபொருள் எனப்படும்.

      உதாரணமாக வேந்தன் மரத்தை வெட்டினான் என்ற வாக்கியத்தில் யார் வெட்டினான்? என்ற வினாவுக்கான விடை எழுவாய். வேந்தன் என்ன செய்தான்? என்ற வினாவிற்கான விடை பயனிலை. வேந்தன் எதை வெட்டினான்? என்ற  வினாவிற்கான விடை செயப்படுபொருள் எனக் கொள்க. எனவே செயப்படுபொருள் என்பது பயனிலைக்கு முன்னால் எதை? யாரை? எவற்றை? போன்ற வினாக்களை இட்டு கேட்கப்படும் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடையாகும். 

      பல சந்தர்ப்பங்களில் செயப்படுபொருள் வெளிப்படாமலும் கருத்துள்ள வாக்கியங்கள் அமைந்துவிடுவதுண்டு. செயப்படுபொருள் தெளிவாகவோ அல்லது மறைந்திருக்குமாயின் அவ்வாக்கியத்தைச் செயப்படுபொருள் குன்றாவினை வாக்கியம் என்று அழைக்கப்படும். செயப்படுபொருள் இல்லாமல் அமையும் வாக்கியத்தினைச் செயப்படுபொருள் குன்றியவினை வாக்கியம் என்கிறோம்.

                                            தமிழாசிரியர் திரு ந.தமிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி.

No comments:

Post a Comment